ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 113

சங்கராபரணம் நரசையர்  
உ.வே.சாமிநாதய்யர் 

பிப்ரவரி 19. உ.வே.சாமிநாதையரின் பிறந்த தினம்.
===
சங்கீதக்கலை தமிழ் நாட்டில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர்கள் சிறந்தவர்களாவர்.  அவர்களுடைய ஆட்சியில் கர்நாடக சங்கீதப் பயிற்சி மிகவும் விரிவடைந்தது.  சங்கீத வித்துவான்கள் அதிகமாயினர்.  தமிழ்நாட்டாருக்குச் சங்கீத விருந்து மிகுதியாகக் கிடைத்தது.  அவர்கள் தங்கள் ஸமஸ்தானத்தில் சிறந்த பல சங்கீத இரத்தினங்களை வைத்துப் போற்றி ஆதரித்து வந்தார்கள்.  அதனால் தஞ்சை அக்காலத்தில் இசைக்கலையின் அரசிருக்கையாக விளங்கியது.

வித்துவான்களுடைய ஆற்றலை அறிந்து போற்றுவதும் வரிசையறிந்து பரிசளிப்பதும் பட்டமளிப்பதும் ஆகிய பலவகைச் செயல்களால் அம்மகாராஷ்டிர மன்னர்கள் பல வித்துவான்கள் மனத்தைக் கவர்ந்தனர்.  சங்கீதத்தில் ஒவ்வொரு வகையில் தேர்ச்சி பெற்ற பல வித்துவான்கள் அவ்வரசர்களால் அளிக்கப்பட்டனவும் தங்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துவனவுமாகிய பட்டப்  பெயர்களை யுடையவர்களாக விளங்கினர்.  வீணைப் பெருமாளையர், பல்லவி கோபாலையர், கனம் கிருஷ்ணையர்த்ஸௌகம் ஸ்ரீநிவாசையங்கார், தோடி சீதாராமையர் முதலிய பல பிரபல வித்துவான்களை ஊக்கப்படுத்திவிட்டவர்கள் தஞ்சை ஸ்மஸ்தானாதிபதிகளே. இவர்களுக்கும் வேறு பலருக்கும் ஆசிரியராகிய பச்சைமிரியன் ஆதிப்பையரென்னும் இணையற்ற சங்கீத வித்துவானை ஆதரிக்கும் புண்ணியமும் அவர்களுக்கு இருந்தது.

அவர்களுள், அருங்கலை விநோதராக விளங்கிய சரபோஜியரசர் காலத்தில் நரசையரென்னும் (*நரஸிம்ஹையரென்பதன் திரிபு*) சங்கீத வித்துவானொருவர் இருந்தார்.  இசையாற்றலில் அவர் ஏனைய வித்துவான்களுக்குச் சிறிதேனும் குறைந்தவரல்லர்.  ஒருநாள் அரசர் முன்னிலையில் பெரிய சபையில் அவருடைய வினிகை நடைபெற்றது.  அப்பொழுது சங்கராபரண ராகத்தை அவர் மிகவும் விரிவாக ஆலாபஞ் செய்து பல்லவி கற்பனை ஸ்வரம் முதலியன பாடி வரலானார்.  முறைப்படியே அதனைப் பாடி வருகையில் அரசரும் சபையோரும் அதில் மிகவும் ஈடுபட்டார்கள். 

அவர் இனிமையாகப் பாடப் பாடச் சபையில் இருந்த யாவரும் ஒன்றுபட்டு மனமுருகினர்; 'இதுகாறும் சங்கராபரணத்தை இப்படி நாம் கேட்டதேயில்லை!என்று வியந்து பாராட்டினார்கள்.  அரசர் அவருடைய ஆற்றலையுணர்ந்து மகிழ்ந்து பலவகைப் பரிசுகளையும் 'சங்கராபரணம் நரசையர்' என்னும் சிறப்பும் பெயரையும் அளித்தார்.  அக்கால முதல் அவர் அப்பெயராலேயே அழைக்கப்படலாயினர்.  எங்கேனும் அவரது சங்கீத வினிகை நடந்தால் அங்குள்ளவர்கள் முதலில் அவரைச் சங்கராபரணம் பாடச்சொல்லிக் கேட்டு  மகிழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்கள்.  இதனால் அவருடைய ஆற்றல் மேன்மேலும் விளக்கமடைந்தது.

ஒருசமயம் நரசையருக்கு எதிர்பாராதவண்ணம் பெருஞ்செலவு உண்டாயிற்று. அதற்காகக் கடன் வாங்க வேண்டியிருந்தது.  தமக்கு வேண்டிய பொருளைத் தருவாரை அவர் காணவில்லை.  அக்காலத்தில் கபிஸ்தலத்தில்(*இவ்வூர் தஞ்சை ஜில்லாவில் பாபநாசத்துக்கருகில் உள்ளது*) இருந்த இராமபத்திர மூப்பனாரென்பவர் சங்கீத ரஸிகராகவும் சங்கீத வித்துவான்களுக்கு ஒரு பெருநிதியாகவும் விளங்கி வந்தார்.  அம்மூப்பனாரிடம் பொருள்பெற எண்ணிய நரசையர் கபிஸ்தலம் சென்று அவரைக் கண்டார்.  மூப்பனார் வித்துவானை உபசரித்துப் பாராட்டி அளவளாவினர்.  நரசையர் அங்கே சில தினம் இருந்தார்.  பிறகு ஒருநாள் தமக்குப் பொருள் வேண்டியிருத்தலை மெல்ல அவர் கூறலானார்:

நரசையர்:  எதிர்பாராத விதத்தில் எனக்குச் செலவு நேர்ந்துவிட்டது.
ஒருவரிடம் சென்று பொருள்கேட்க என் மனம் நாணமடைகிறது.  என்ன செய்வதென்று யோசிக்கையில் தங்கள் ஞாபகம் வந்தது.  தங்களிடம் கடனாகப் பெற்றுச்சென்று மீட்டும் கொடுத்துவிடலாமென்று வந்தேன்.

இராமபத்திரர்:  கடனா வேண்டும்எவ்வளவு வேண்டும்?

நரசையர்:  ஆம்; எண்பது பொன்.

இராமபத்திரர்:  கடன் வாங்கவேண்டுமென்கிறீர்களே; எதையாவது அடகு
வைப்பீர்களா?

நரசையர்:  (சிறிதுநேரம் யோசித்துவிட்டு): அப்படியே வைக்கிறேன்.

இராமபத்திரர்:  எதை வைப்பீர்கள்?

நரசையர்:  ஓர் ஆபரணத்தை.

இராமபத்திரர்:  எங்கேஅதை எடுங்கள் பார்க்கலாம்.

நரசையர்:  அந்த ஆபரணத்தைக் கண்ணால் பார்க்க முடியாது; காதினால் கேட்கலாம்; எக்காலத்தும் அழியாதது; இன்பத்தைத் தருவது.  என் உடைமையாகிய சங்கராபரண ராகமே அது.  அதையே நான் அடகு வைக்கிறேன்.  தங்களிடம் பெற்றுக்கொள்ளும் பொன்னைத் திருப்பிக்கொடுக்கும் வரையில் அதை நான் எங்கும் பாடுவதில்லையென்று உறுதி கூறுகிறேன்.

இராமபத்திரர்:  அப்படியானால் உங்களுக்கு வேண்டியது தருகிறேன்.

மூப்பனார் நரசையரிடம் ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு எண்பது பொன்னை அளித்தார்.  அத்தொகையை வாங்கிக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் சென்று செய்யவேண்டிய காரியங்களை நிறைவேற்றினார்.  அதுமுதல் எவ்விடத்தும் அவர் சங்கராபரணத்தைப் பாடுவதை நிறுத்தியிருந்தார்.  எங்கேனும் வினிகைகளுக்குச் சென்றால் அவர் வேறு ராகங்களையும் கீர்த்தனங்களையுமே பாடி வந்தார்.

அக்காலத்திலே கும்பகோணத்தில் அப்புராயரென்ற ஒரு செல்வர் இருந்தார்.  அவர் கம்பெனியாரிடம் பெரிய உத்தியோகம் பார்த்துவந்தார்.  தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டிடங்களின் தொடர்புடையவராதலின் அவர் உபய ஸமஸ்தான திவானென்னும் சிறப்புப்பெயரால் வழங்கப் பெற்றார். அக்காலத்திலிருந்த வாலீஸ் என்னும் துரைக்குப் பிரியமானவராக இருந்தது பற்றி வாலீஸ் அப்புராயரென்றே யாவரும் அவரை அழைப்பார்கள்.  கும்பகோணம் ரெட்டியார் அக்கிரகாரத்தில் குளத்தின் வடகரையில் அவருடைய வீடுகள் உள்ளன.

அவருடைய வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்றது.  அந்த வைபவம் பலவகையிலும் சிறப்புடையதாக இருக்கவேண்டுமென்றெண்ணி அதற்குரியவற்றை அவர் செய்தனர்சங்கீத வினிகையொன்று நடத்தவேண்டுமென்றும் அதற்கு மிகவும் சிறந்த வித்துவான்களை அழைக்கவேண்டுமென்றும் அவர் எண்ணினார்.  அங்ஙனம் அழைக்கப் பட்டவர்களுள் சங்கராபரணம் நரசையர் ஒருவர்.

குறிப்பிட்ட ஒரு வேளையில் நரசையருடைய வினிகை நிகழ்ந்தது.  ராயர் அவருடைய ஆற்றலைப் பர்ற்றி நன்றாக அறிந்தவராதலின், "உங்களுக்குப் பட்டம் அளிக்கச்செய்த சங்கராபரணத்தைப் பாட வேண்டும்" என்று விரும்பினார்உடனிருந்த அன்பர்களும் வேண்டிக்கொண்டனர்.

நரசையர்: தாங்கள் க்ஷமிக்க வேண்டும்; அதனை இப்போது நான் பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்.

ராயர்: ஏன்?

நரசையர்:  அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். அக்கடனைத் திருப்பிக் கொடுத்தபிறகுதான் அதை நான் பாடலாம்.

ராயர்:  என்ன ஆச்சிரியமாக இருக்கிறதுராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை.  யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள்சொன்னால் உடனே அதனை நாம் தீர்த்துவிடுவோம்.

சங்கராபரணத்தை அடகுவைத்த வரலாற்றை வித்துவான் கூறினார்.  உடனே ராயர் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் தக்க ஒருவர்பால் அளித்து அவற்றை மூப்பனாரிடம் கொடுத்து அவரிடமிருந்து கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கிவரும்படி சொல்லியனுப்பினார்.  அன்று நரசையர் வேறு ராகங்களையே பாடினார்.

ராயரிடமிருந்து சென்றவர் இராமபத்திர மூப்பனாரிடம் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறினார்.  மூப்பனார் மிகவும் மகிழ்ந்து உடனே அந்தத் தொகையோடு பின்னும் சில தொகையை எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்து அப்புராயரையும் நரசையரையும் கண்டார்.  அவரை அப்புராயர் கண்டவுடன், "பணம் வந்து சேர்ந்ததாவிடுதலையோலை எங்கே?" என்றார்.

இராமபத்திரர்:  ராயரவர்களும் சங்கீத சிகாமணியாகிய நரசையரவர்களும்
என்னுடைய செயலை அடியோடே மறந்துவிடவேண்டும்.  ஐயரவர்கள் என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கேட்டு வாங்க உரிமையுடையவர்கள்.  அவர்களைப் போன்றவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்அவர்கள் பணம் வேண்டுமென்றால் உடனே கொடுத்திருப்பேன்.  'கடனாக வேண்டும்' என்று அவர்கள் கேட்டது எனக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கியது.  விளையாட்டாக அடகுண்டாவென்று கேட்டேன்.  அவர்கள் சங்கராபரணத்தை அடகு வைத்தார்கள்.  அன்றுமுதல் இன்று வரையில் அதனை எங்கும் பாடியதாக நான் கேட்டிலேன்.  இதனால் அவர்களுடைய உயர்ந்த குணமும் உண்மையும் புலப்படுகின்றன.  இந்தத் தொகை எனக்குரியதன்று.  அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.  இதையல்லாமல் இவ்வளவு நாள் சங்கராபரணத்தைச் சிறைசெய்ததற்கு  அபராதமாக நான் கொடுக்கும் இந்தத் தொகையையும் தங்கள் திருக்கரத்தாலேயே அவர்களுக்கு வழங்கவேண்டும்.  இதோ விடுதலை ஓலையும் தந்து விட்டேன்.

மூப்பனாருடைய அன்புடைமை அப்பொழுது யாவருக்கும் வெளியாயிற்று.  'கடன் பெற்றவர் கடனைத் திருப்பிக்கொடுப்பதையும் கடன் தந்தவர் வட்டியுடன் பெற்றுக்கொள்வதையும் உலகத்தில் கண்டிருக்கிறோம்.  கடன் வாங்கினவர் திருப்பிக் கொடுத்தால், கொடுத்தவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல் பின்னும் தொகை சேர்த்துக் கொடுப்பது புதுமையிலும் புதுமை' என்று யாவரும் வியந்தார்கள்.

மறுநாள் கல்யாணப் பந்தலில் நரசையருடைய வாக்கிலிருந்து அமுததாரையைப்போல விடுதலை பெற்ற சங்கராபரணம் வெளிப்பட்ட காலத்தில் கேட்ட யாவரும் பதுமைகளைப் போலத் தம்மை மறந்து ஸ்தம்பிதமாயினரென்று கூறவும் வேண்டுமோ?

அக்காலமுதல் நரசையர் வாலீஸ் அப்புராயருடைய ஆஸ்தான வித்துவானாக   விளங்கினார்.

தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள் 

சனி, 18 பிப்ரவரி, 2017

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 2

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 
ஸரஸி 

பிப்ரவரி 18. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!

தொடர்புள்ள பதிவுகள்:

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

எஸ். வையாபுரிப்பிள்ளை - 2

இராம சரிதத்தின் வரலாறு 
எஸ்.வையாபுரிப்பிள்ளை 
[ நன்றி: சக்தி விகடன் ] 

பிப்ரவரி 17. வையாபுரிப் பிள்ளையின் நினைவு தினம்.

அவர் ‘சக்தி’ 1948 பொங்கல் மலரில் எழுதிய ஒரு கட்டுரை இதோ!

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ். வையாபுரிப்பிள்ளை

என். சி. வசந்தகோகிலம் - 1

வாடாத இசை தந்த வசந்தகோகிலம்!

வாமனன் 


தேனினும் இனிய குரலாலும் வண்டின் ரீங்காரம் போன்ற பாட்டாலும், காமாட்சி என்ற இளம்பாடகிக்கு, வசந்தகோகிலம் என்ற காரணப் பெயர் அமைந்தது. அதே இசை பலத்தின் காரணமாக, ஏழு படங்களில் அவர் நடித்தார்.

மிகப் பெரிய வெற்றிப்படமான 'ஹரிதாஸில்', தியாகராஜ பாகவதரின் மனைவியாக நடித்து, சில அழகான பாடல்களை இசைத்தார், வசந்தகோகிலம். இசைத்தட்டுகளில் அவர் பதிவு செய்திருக்கும் தனிப்பாடல்கள், ரத்தினங்கள் போல் ஜொலித்து, தரத்தில் விஞ்சி நிற்கின்றன.

'ஆனந்த நடனம் ஆடினாள்' என்ற காம்போதி ராகப் பாடல் ஒன்று போதாதா? 'வானும் புவியும் வணங்கி வலம்வர, ஞானவெளியினில் வீணை ஓம் ஓம் என' என்று வரும், சுத்தானந்த பாரதியாரின் அற்புதமான வரிகளில், வசந்தகோகிலத்தின் கானம், வானையும் மண்ணையும், இசை வெள்ளத்தில் இன்றளவும் நனைத்துக் கொண்டிருக்கிறது.


காத்திரம் குறையாமல், உச்ச ஸ்தாயியிலும் சஞ்சரிக்கும் குரல்; உச்சரிப்பில் நெருடல்கள் இல்லாத தெளிவு, இனிமை; உதட்டில் இருந்து பாடாமல் உள்ளத்தில் இருந்து பாடும் தன்மை; கஷ்டமான சங்கதிகளை உதிர்த்துச் செல்லும் அனாயசம்; பிருகா அசைவும், நீண்ட கார்வைகளும் மாறிமாறி வரும் பாணி; மனோதர்மம் என்ற சுயமான இசைக் கற்பனையின் வீச்சு. இப்படி சங்கீத வசந்தங்களின் சங்கதிகள், வசந்தகோகிலத்தின் இசையில், ஆடிவெள்ளம் போல், அலைபுரண்டு வருகின்றன.

கேரளத்தின், இரிஞ்ஞாலக்குடாவில், சந்திரசேகர அய்யர் என்பவரின் கடைசிப் பெண்ணாக, 1921ல் பிறந்தார், வசந்தகோகிலம். குடும்பம், நாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தபின், ஜாலர் கோபால அய்யரின் இசைப் பள்ளியில், பல ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்.

சென்னை வித்வத் சபையின், 1938ம் ஆண்டு இசைவிழா தொடர்பாக நடந்த இசைப் போட்டியில், முதல் பரிசை வென்றார். பரிசு பெற்றவரை தேடிப் பிடித்து, எச்.எம்.வி., நிறுவனம், 'எனக்குன் இருபதம்' என்ற பாடலைப் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட்டது.

இந்த காலகட்டத்தில், கோவையை சேர்ந்த, வசதியான குடும்பத்தில் பிறந்த, பி.ஏ.பி.எல்., படித்த சி.கே.சாச்சி, 'சந்திரகுப்த சாணக்கியா' என்ற படத்தின் நாயகியாக, வசந்தகோகிலத்தை நடிக்க வைத்தார் (1940).


திருமணமாகி கணவரிடம் இருந்து பிரிந்துவிட்ட கோகிலத்தின் போஷகராகவும் மாறினார். வேணுகானம் (1941), கங்காவதார் (1942), ஹரிதாஸ் (1944), வால்மீகி, குண்டலகேசி (1946), கிருஷ்ண விஜயம் (1950) முதலிய படங்களில், வசந்தகோகிலத்தின், ரம்மியமான குரல், பல பாடல்களில் பரிமளித்தது.
'சினிமாவை விட, சங்கீத உலகில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அற்புதமான சாரீர வசதிகளுடன் அபார ஞானமும் கொண்ட வசந்தகோகிலம், ஏராளமான இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். 1945ம் வருஷம், கும்பகோணத்தில் நடைபெற்ற இரண்டாம் கலை முன்னேற்ற மகாநாட்டில், 'மதுர கீத வாணி' என்ற பட்டத்தை, டைகர் வரதாச்சாரியார், வசந்தகோகிலத்திற்கு வழங்கினார்' என்பது, நாற்பதுகளின் பிற்பகுதியில் வந்த செய்தி.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைத்தட்டும், வசந்தகோகிலத்தின் இசைத்தட்டும் போட்டா போட்டியோடு வந்த காலகட்டத்தில், வசந்தகோகிலத்தின் இசை, எம்.எஸ்., ஸுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது என்று, கணித்த இசை அறிஞர்களும் இருந்தனர். இசை உலகில், உயர்ந்த இடத்தை எட்டிப்பிடிக்கும் தறுவாயில், தனது 30வது வயதில், காசநோய்க்கு இரையானார், வசந்தகோகிலம். அவர் பதிவு செய்த பாடல்களில், இலக்கியமும் இசையும் ஒரு நாதநாயகியின் உயிர்மூச்சில் கலந்தொலிக்கின்றன.

[ நன்றி ; தினமலர் ] 

 ஒரு பாடல்:  “ இந்த வரம் தருவாய்” - கரஹரப்ரியா 


தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ரசிகமணி டி.கே. சி. - 3

எந்தநாள் காண்போம் ?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைபிப்ரவரி 16, 1954.  ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் மறைந்த தினம். 
அப்போது 'கல்கி' யில் வந்த சில பக்கங்கள் இதோ!

[ நன்றி:  கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

புதன், 15 பிப்ரவரி, 2017

டி.கே.சண்முகம் -2

அவ்வை சண்முகம் : பேட்டி
பூவை எஸ். ஆறுமுகம் 


பிப்ரவரி 15. டி.கே.சண்முகத்தின் நினைவு தினம்.

’உமா’ இதழில் 1957-இல் வெளியான ஒரு  பேட்டிக் கட்டுரை இதோ!
தொடர்புள்ள பதிவுகள்:


கொத்தமங்கலம் சுப்பு -19

ஐக்ய நாட்டுப் பஞ்சாயத்து !
கொத்தமங்கலம் சுப்புபிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்புவின் நினைவு தினம்

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு