வெள்ளி, 30 நவம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 1

கணபதியும் மகிஷாசுர மர்த்தனியும் 

ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் ‘தேவனும்’, ‘சில்பியும்’ இணைந்து அளித்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு அடிமையான பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

தேவனையும், சில்பியையும் நன்கு அறிந்த ஓவியர் ‘கோபுலு’வின் சொற்களிலேயே, இத்தொடர் எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.

“ .... 1946-ஆம் ஆண்டு , டயாபடீஸ் முற்றிப்போனதன் காரணமாகப் படுத்த படுக்கையாகி, அமரராகிவிட்டார் மாலி. அதன்பின், எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “

இந்தத் தொடர் இன்னும் நூலாக வரவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.*

எப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து.

என்னிடம் உள்ள சில ‘ செல்வங்களை’ அவ்வப்போது இங்கிடுவேன்.  படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!

கச்சேரியை முதலில் ‘வாதாபி கணபதி’யுடன் தொடங்கலாமா?
[நன்றி; விகடன்]


பி.கு.

 எத்தனை பேருக்குக் ‘கல்கி’யின் ‘சிவகாமியின் சபதம்’ நினைவிற்கு வருகிறது? :-))

==================

இந்தக் கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் கவிதைகள்:

இடையொரு புறமே சாய்த்தே
     எழிலுற நிற்கும் வண்ணம்
படைபல ஏந்திக் காளி
     பாரினைக் காக்க வந்து
தடையற இசையைக் கேட்டுத்
    தண்டமிழ்த் திருவா ரூரில்
கடைவிழி கருணை சிந்தக்
    கண்ணெதிர் சிலையாய் நின்றாள்!


மகிடனைக் கொன்ற தேவி
    மங்கலச் சிலையைக் கண்டு
முகிலெனக் கருணை பெய்யும்
    மோகனப் படமாய்த் தீட்டி
நகமொடு சதையும் கொண்டு
    நம்மெதிர் நிற்கச் செய்தார்
அகவிழி கொண்டு நோக்கும்
    அற்புதச் "சில்பி" யாரே!


புல்லெலாம் புலவர் போலே
    புதுப்புதுப் பாடல் செய்யும்
வில்லெலாம் புருவம் ஆகும்
    விழியெலாம் காதல் ஏந்தும்
கல்லெலாம் இசையைச் சொல்லும்
    கழலெலாம் ஜதியைச் சொல்லும்
இல்லெலாம் இறைவன் நாமம்
    இசைத்திடும் திருவா ரூரே!


சிவனாரின் பாதம் பட்டச்
   சீர்மிகு திருவா ரூரில்
பவநோயும் அற்றுப் போகும்
   பாரினில் இவ்வூர் தன்னில்
எவரேனும் பிறந்தால் போதும்
   இன்பங்கள் எல்லாம் துய்த்துத்
தவயோகம் செய்தார் போலும்
   தண்ணடி அடைவார் திண்ணம்!


முகமெலாம் மலர்ந்து நிறக
   முக்தியும் அளிக்கும் ஊரைச்
சகமெலாம் அறியும் வண்ணம்
   தண்டமிழ் மொழியும் சேர்த்து
மிகமிகச் சுவையாய் அன்று
   விகடனில் வந்த தெல்லாம்
இகபர சுகத்தை ஈய
   இட்டவர் வாழி வாழி!


கரமலர் இருந்த தத்தை
   கழலடி நோக்க வேண்டி
தரையினில் அமரக் கண்டு
   தாமரைக் கரத்தை நீட்டி
வரையிலா அன்பைக் காட்டி
   வாவெனச் சொல்லல் போலும்
வரமதை நமக்கெல் லாமே
   வழங்கிடும் எழிலைப் பாரீர்!


கழலடி அழகா இல்லை
   கரமலர் அழகா இல்லை
விழிமலர் அழகா இல்லை
   விரியருள் அழகா இல்லை
மொழிதமிழ் அழகா மக்கள்
   முகமதி அழகா இல்லை
பொழியிசை அழகா என்றே
   புள்ளது வியந்த வாறோ!


சிலையது அழகா இல்லை
   சித்திரம் அழகா நிற்கும்
நிலையது அழகா இல்லை
   நீள்விழி அழகா இல்லை
கலையது அழகா இல்லை
   கவிதையின் அழகா என்றே
நிலமிதில் உள்ளோர் போலே
   நின்றதோ கிளியும் அங்கே!


அக்கமும் கரத்தில் கண்டேன்
    அழகிய கிளியும் கண்டேன்

சக்கரம் சங்கம் கண்டேன்
    தனுவுடன் வாளும் கண்டேன்
முக்கணன் சூலம் போலும்
    மூவிலை மின்னக் கண்டேன்
திக்கெலாம் காப்ப தற்காய்த்
    திகழ்கரம் எட்டும் கண்டேன்.


கரத்திலே படைகள் கொண்டும்
    கண்ணிலே கருணை கொண்டும்
வரத்தினை அளிக்க நிற்கும்
    வலக்கர அழகைக் கண்டேன்
சரம்பல மார்பில் பூண்ட
    தாயெனக் கண்ட தாலே
வரையிலா இன்பம் கொண்டேன்
    வணங்கினேன் அம்மா நானே

பஞ்சமுக ஆனைமுகன்

ஆயிரம் இதழ்கள் கொண்ட
   அழகிய தாமரை தோன்ற,
சீயமும் அதன்மேல் தோன்ற,
   சிறப்புடை மூத்தோன் ஆனைச்
சேயவன் அதன்மேல் இங்கே
   செந்தமிழ்த் திருவா ரூரில்
தாயவள் தன்னைக் காணத்
   தலைபல கொண்டு தோன்றும்.


சிங்கத்தின் மேலே ஆனை
   திகழ்ந்திடும் அழகைக் கண்டே
அங்கத்தில் புளகம் தோன்ற
    அருந்தமிழ் துணையாய்த் தோன்ற
சங்கத்தில் கவியும் தோன்ற
   சந்தமும் உடனே தோன்ற
எங்கெங்கும் இன்பம் தோன்ற
   ஐந்தலை ஐயன் தோன்றும்
.

தண்மதி வானில் தோன்ற
   தாமரை தரையில் தோன்றும்
மண்பதி திருவா ரூரில்
   மனத்தினில் மகிழ்வு தோன்றக்
கண்ணெதிர் காளை தோன்றும்
   கறையுடைக் கண்டன் தோன்றும்
விண்ணவர் கோடி கோடி
   வியப்புடன் தோன்றும் தோன்றும்.


புவியுளோர் கூட்டம் தோன்றும்
   புகழெலாம் செப்பத் தோன்றும்
கவியெலாம் கதறத் தோன்றும்
   கரிமுகம் ஐந்தும் தோன்றும்
விமலனின் மகனைக் காண
   விழியெலாம் விரியத் தோன்றும்
கமலமா குளமும் தோன்றும்
   கவின்மிகு திருவா ரூரே.


எழுசுரம் காற்றில் தோன்றும்
   இசையுடன் பாடல் தோன்றும்
முழுமதி வானில் தோன்றும்
   முத்தமிழ் புவியில் தோன்றும்
பொழில்பல சூழும் கோயில்
   பொலிவுடன் புதுமை தோன்ற
எழிலுடைப் பிள்ளை யாரின்
   இன்னுரு தோன்றும் தானே. . . . சிவ சூரியநாராயணன்.

ஆசுகவி சிவசூரிக்கு என் பாராட்டுகள், நன்றி!

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் : பிற கட்டுரைகள்

பின் குறிப்பு: 
* இத் தொடர் 2013-இல்  விகடன் நூல்களாக வெளிவந்தன. 
’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்

திங்கள், 26 நவம்பர், 2012

'சாவி - 7 : ‘அநுமார்' சாமியார்


’அநுமார்' சாமியார்

 சாவி
[ அசல்: கோபுலு, நகல்: சு.ரவி ] 

           

ஆலம் விழுதுபோல் சடை சடையாகத் தொங்கும் பரட்டைத் தலைமயிர். கையிலே ஒரு பை; இடுப்பிலே காவி வேட்டி. தாடியும் புருவமும் போக நெற்றியிலே உள்ள இடைவெளி முழுதையும் பட்டை நாமம் மூடி மறைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஓர் ஆசாமியை எங்கோ பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவர்தான் அநுமார் சாமியார்!

அவருக்கு என்ன வயசோ, எந்த ஊரோ, என்ன பேரோ, எங்கே பிறந்து எங்கு வளர்ந்தவரோ?--யாருக்குமே எந்த விவரமுமே தெரியாது.

அவர் தெருவில் நடந்து சென்றால், ''டேய், அநுமார் சாமியாருடா!'' என்று பத்துப் பிள்ளைகளாவது அவர் பின்னோடு நடந்து செல்வார்கள்.

அநுமார் சாமியார் பாட்டு பாடிக்கொண்டே நடப்பார். ஆனால், பிச்சை எடுக்கமாட்டார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரரைப்போல் காணப்படுவார். ஆனால், அவர் பைத்தியக்காரர் அல்ல.

ஊர் ஊராகப் போய், சுவர் சுவராக அநுமார் படம் எழுதுவதுதான் அவருடைய வேலை, லட்சியம் எல்லாம். அவருடைய பையில் என்னென்னவோ இருக்கும். காவிக் கற்கள், உற்சவ நோட்டீசுகள், ஒரு பித்தளைச் செம்பு, கிழிசல் கம்பளி, வேர்க்கடலை, நாமக்கட்டி --இவைதான் அவருடைய ஆஸ்தி. பகலெல்லாம் சுற்றிவிட்டு இரவில் ஏதாவது ஒரு மரத்தின் கீழோ, சத்திரத்துத் திண்ணையிலோ போய்ப் படுத்துக்கொள்வார். அதுவும் இஷ்டமிருந்தால்தான். இல்லையென்றால் அதுவும் இல்லைதான். இந்த உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் 'தாமரை இலைத் தண்ணீர்போல்' வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துறவி அவர்.

பொழுது விடியும் முன்பே ஆற்றிலோ, குளத்திலோ இறங்கித் தலை முழுகிவிட்டு அந்த நாலுமுழக் காவித் துண்டையும் துவைத்து உலர்த்திக் கட்டிக்கொண்டு பரந்த நெற்றி முழுதும் பட்டை நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொள்வார்.

பிறகு, ஊருக்குள் சென்று ஏதாவது ஒரு கிளப்புக்குள் நுழைந்து, ''ஆண்டவனே, இந்தக் கட்டைக்கு என்ன கொடுக்கிறீங்க?'' என்று கேட்பார். இரண்டு இட்டிலியும் ஒரு கப் டீயும்தான் அவருடைய காலை ஆகாரம் என்பது கிளப்புக்காரர்களுக்குத் தெரியும்.

           

ஆகாரம் முடிந்ததும் அதற்குண்டான காசைக் கொடுத்துவிட்டு, கடைத்தெருப் பக்கம் கிளம்பிவிடுவார் சாமியார். போகும்போதே காலிச் சுவர் கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டுதான் போவார்.

பள்ளிக்கூடச் சுவர், கோயில் மதில் சுவர், முனிசிபாலிடிச் சுவர் இப்படி எத்தனை சுவர்கள் இல்லை? ஏதாவது ஒன்று அவருக்கு அகப்பட்டுவிடும். அவ்வளவுதான், பையிலுள்ள காவிக் கட்டிகளை எடுத்துத் தண்ணீரில் குழைத்துக் குச்சி மட்டையைக் கொண்டு சுவரில் அநுமார் சித்திரம் எழுத ஆரம்பித்துவிடுவார். அநுமார் சித்திரம் என்றால் அதில் எத்தனை எத்தனையோ வகை!

சஞ்சீவி பர்வதத்துடன் பறக்கும் அநுமார்!

விசுவ ரூப தரிசன அநுமார்.

சீதைக்குச் சூடாமணி அளிக்கும் அநுமார்.

இராவணனுக்கு எதிரில் வாலைக் கோட்டையாகக் கட்டி அதன்மீது உட்கார்ந்திருக்கும் அநுமார்.

இராம பட்டாபிஷேகத்தில் பயபக்தியுடன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் அநுமார்.

சில சுவர்களில் காவிக் கட்டிகளால் சித்திரிப்பார். சில சுவர்களில் சிவப்பு வர்ணத்தைக் கொண்டே எழுதுவார்.

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும், தெருவில் திரியும் சோம்பேறிச் சிறுவர்களும் அவர் எழுதும் அநுமார்  சித்திரத்தைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி, பகல் முழுதும் எழுதுவார். சில சமயங்களில் இரவில்கூட எழுதிக்கொண்டிருப்பார்.

இன்றைக்குத் திருப்பதி, நாளைக்கு நாமக்கல், அதற்கு மறுநாள் பழநி என்று மந்திரிகளைப்போல் வருஷம் முழுவதும் சுற்றுப்பயணந்தான் அநுமார் சாமிக்கு.

நடக்க முடியாவிட்டால்தான் பஸ்ஸில் ஏறுவார். பணம் கொடுத்து டிக்கெட்டு வாங்கிக்கொண்ட பிறகே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

''சாமியாரே, உங்களுக்கு எதுக்கு டிக்கட்?'' என்று கண்டக்டர் சொன்னபோதிலும் கேட்கமாட்டார்.

''அப்பனே! இந்தக் கட்டை யாருக்குப் பணம் சேர்த்து வைக்க வேணும்?''

''சாமியார் எதுவரைக்கும் போகணும்?'' என்றுதான் பக்தியோடு கேட்பார்கள். அவருக்கு எந்த இடத்திலும் உபசாரந்தான். கோடைக்காலம் வந்தால்தான் அவர் ஓரிடத்தில் தங்குவார்.

       நாலு சாலைகள் கூடும் சந்திப்பிலோ, சந்தைகள் கூடுமிடத்திலோ, உற்சவம் நடைபெறும் இடங்களிலோ, அநுமார் சாமியார் 'தண்ணீர்ப் பந்தல்' போட்டுவிடுவார். பந்தலுக்கு முன்னால் 'அநுமார் தர்ம கைங்கரியம்' என்று எழுதியிருக்கும்.

ஒரு சிறு தென்னங்கீற்றுப் பந்தல், அதற்குள்ளே நீர்மோர், பானகம் இரண்டையும் பானைகளில் நிரப்பி வைத்துக் கொண்டு, ஏழை எளியோருக்கு வழங்குவார்.

தர்ம கைங்கரியத்துக்கு வேண்டிய பொருளுக்கும் பணத்துக்கும் அவர் யாரையும் தேடிச் செல்லமாட்டார். அவ்வளவும் அவரைத் தேடியே வரும்.

பைக்குள் செப்பு அநுமார் கவசங்கள் நிறைய வைத்திருப்பார். சிறு குழந்தைகளைக் கண்டால் அந்தக் கவசத்தில் ஒன்றை எடுத்து அரைஞாணில் கட்டிவிடுவார்.

அந்த நேரங்களில் குழந்தைகள் அவரைப் பூச்சாண்டி என நினைத்து அலறும்.

''அப்பனே, ஆண்டவா, அழாதே'' என்று அன்போடு கூறுவார் சாமியார்.

கோயில்களில் கிடைக்கும் பிரசாதந்தான் அவருக்கு ஆகாரம்.

ஊருக்கு ஓர் அநுமார் கோயில் கட்டிவிடவேண்டுமென்பது அவர் ஆசை.

சாமியார், அநுமார் சித்திரம் போட்டுக்கொண்டிருக்கும் போது சாலை வழியே போகும் படித்த அறிவாளிகளில் சிலர், ''இது ஒரு மாதிரிப் பைத்தியம். எந்தச் சுவரைக் கண்டாலும் அநுமார் படம் எழுதிக்கொண்டிருக்கும்'' என்பார்கள். அவர்களிலேயே வேறு சிலர், ''கண்ட கண்ட ஆபாச வார்த்தைகளை எழுதிச் சுவர்களைப் பாழாக்கும் பைத்தியங்களைக் காட்டிலும் இந்தப் பைத்தியம் எவ்வளவோமேல்'' என்று அதற்குப் பதில் கூறுவார்கள்.

 [நன்றி : ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல்  ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் மறுமொழி:

அநுமார் சாமியார்

சாவியின் எழுத்தினை எடுத்ததும் -ஒரு
   சாமி யாரினைப் படித்ததும்
ஆவியை என்னவோ செய்ததும் - ஒரு
   ஆனந்தம் என்னுளே பெய்ததும் -நான்
கூவி அலறிட வேண்டினும் -அதைக்
   கொட்டிடக் கவிமகள் தூண்டினும் - ஒரு
ஓவியம் போலதைத் தீட்டினும் - பிறர்
   உணர்த்திட வழியது காட்டுமோ.


நாடெங்கும் நடந்ததைச் பேசுவார் - அவர்
   நாமத்தைப் பெரிதாய்ப் பூசுவார்
வீடெங்கும் அவர்க்கென நாட்டுவார் -அந்த
   வைகறைக் குளியலைக் காட்டுவார்
காடெனத் தொங்கிடும் சடையுடன் -அவர்
   காவி நிறமொளிர் உடையுடன்
கோடுகள் கிறுக்கிடும் போதிலே - அங்கு
   குடிகொள்ளும் இறைசுவர் மீதிலே.

ஆண்டியைப் போலொரு தோற்றமும் - நல்ல
   அரசனைப் போலொரு ஏற்றமும்
நீண்டு வளர்ந்ததோர் தாடியும் -பாதி
   மேனியை மறைத்தது மூடியும்
கூண்டைத் துறந்ததோர் பறவையென -ஒரு
   கோல முகத்துடைப் பிறவியென
யாண்டும் இருந்திடும் சாமியிவர் - இவர்
   யாரென அறியார் பூமியிலே.

கோடையில் விழியெதிர் பார்த்திட - அந்தக்
   குடிபடை உடல்மிக வேர்த்திட
ஓடையாய் தாகம் தீர்த்திட - இவர்
   உவப்புடன் நீர்மோர் வார்த்திட
ஆடையில் அரைத்துணி போர்த்திட -ஒரு
   ஆண்டவன் எனப்புவி ஆர்த்திட
வாடை மிகுமலர் தோற்றிடத் - திகழ்
   வடிவினை எப்படிப் போற்றிட!


சிவ சூரியநாராயணன்.


தொடர்புள்ள பதிவுகள்: 

சாவியின் படைப்புகள்