புதன், 5 டிசம்பர், 2012

மனம் போன போக்கில் : கவிதை

மனம் போன போக்கில்
பசுபதி



’கோபுர தரிசனம்’  2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை.

மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக்
        கனமிகு சித்ரம் என்பார் -- கிளியே!
        காலத்தின் கோல மடீ!                                                   (1)

 காலம் எனும்கருத்தில் காலன் பதுங்குவதை
        ஞாலம் அறிந்து கொண்டால் -- கிளியே!
         நன்மை பிறக்கு மடீ!                                                    (2)

 நன்மை தருமுணவு நாக்கில் இனிக்காமல்
         இன்பம் தராத தேனோ? -- கிளியே!
          என்ன கொடுமை யடீ!                                                 (3)

 என்னதவம் செய்ததோ இந்தியத் தேசமென்பேன்
          தென்னிசை என்னும் செல்வம் -- கிளியே!
           தேனினும் தித்திப் படீ!                                                (4)

 தேனெனப் பேசுபவர் தேர்தல் முடிந்தபின்பு
           பூனை யெனப்பதுங்குதல் -- கிளியே!
           புனைசுருட் டில்லை யடீ!                                            (5)

 புனைவும் அனுபவமும் புற்றீசல் போல்தொ டர்ந்தால்
           நனவுறை ஓடை ஆமோ? -- கிளியே!
           நாறிடும் குட்டை ஆமோ ?                                         (6)

நனவோடைப் பாதையில்நான் அஞ்சு பகைவரிடை
           மனம்போன போக்கில் சென்றால் -- கிளியே!
           மலையுச்சி சேர்வே னோடீ?                                       (7)

 கண்டவழி செல்மனத்தைக் கட்டுப் படுத்துவது
            சண்டிக் குதிரை மேலே -- கிளியே!
             சவாரி முயற்சி யடீ!                                                   (8)

 அலைமோதும் வாழ்வினிலே அமைதி இலாத சேற்றில்
             மலரும் மவுனம் என்பார் -- கிளியே!
             மனமடங்கிப் போன பின்பே!                                     (9)

 மனம்முழுதும் போனால்தான் போக்குப் புலப்படுமோ?
           மனத்தினைப் போக்கிடவே -- கிளியே!
           மார்க்கத்தைச் சொல்லுவையோ?                               (10)



 தொடர்புள்ள பதிவுகள் :

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இதை வாசித்ததையிட்டு மிக மகிழ்வு.
இறையருள் கிடைக்கட்டும்.
இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக மிக உன்னதமான கருத்து கொண்ட கவிதை. வாழ்க நண்பர் பசுபதி!
கவியோகி வேதம்