திங்கள், 27 ஜனவரி, 2014

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்

’விகட’ அனுபவங்கள்! 



ஜனவரி 27, 2014 -இல் மறைந்த பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் இந்தத் தொகுப்பை இடுகிறேன். அவருடைய பாரதி எழுத்துகள் சேகரிப்பைப் பற்றிப் பலரும் படித்திருப்பர். ஆனால், அவர் ஒரு மூத்த பத்திரிகையாளரும் கூட; தமிழ் இதழ்களின் வளர்ச்சியை நேரில் பார்த்தும், ஆராய்ந்தும் கட்டுரைகளும், “தமிழ் இதழ்கள்” ( காலச்சுவடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். அதனால், அவருடைய சில ’ஆனந்த விகடன்’ அனுபவங்களை  மட்டும் இங்கிடுகிறேன். இவை விகடன் மலர்களில் வெளியான அவர் அளித்த நேர்காணல்களிலிருந்தும் , அவர் நூலிலிருந்தும் தொகுத்தவை.

பத்மநாபன் 1933-இல் விகடனில் சேர்ந்தார். பிறகு, ஜெயபாரதி ( 1936-37), ஹனுமான் ( 1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணி கதிர் ( 1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.



இதோ அவரே பேசட்டும்!

“ 1926-இல் பூதூர் வைத்தியநாதையர் என்ற புலவர் ஆரம்பித்த விகடன் 1928-இல் வாசன் கைக்கு வந்தது. அவர் விகடனை ஏற்ற ஆறு மாதத்துக்கெல்லாம் ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் அவரைத் தேடி, நெல்லையப்ப பிள்ளையின் சிபாரிசுடன் வந்தார். நம் நாட்டில் நகைச்சுவை போதவில்லை என்று தலையங்கமே எழுதிய வாசன், கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவைக் கட்டுரைகளை விரும்பி, வரவேற்று, நல்ல சன்மானமளித்து ஊக்கி, ‘கல்கி’ என்ற சிறந்த எழுத்தாளர் உருவாக உதவினார். இதுபோல ‘துமிலன்’ என்ற ந.ராமஸ்வாமியையும் ஊக்கப் படுத்தி, அவரும் விகடனில் தொடர்ந்து எழுத வகை செய்தார். ( 1932 -இல்) விகடன் மாதமிருமுறையானதை முன்னிட்டு ‘தேவன்’ என்ற ஆர்.மகாதேவன் விகடன் உதவியாசிரியராக எடுத்துக் கொள்ளப் பட்டார்.”


“ஆனந்த விகடனில் சேரும்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் ‘மாணவர் பகுதி’ என்று தனியொரு பகுதி வரும். அதற்கு சில சிரிப்புத் துணுக்குகளை அனுப்பி வைத்தேன். பிரசுரித்திருந்தார்கள். அடுத்ததாக, கல்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “நிறைய படியுங்கள். ஆங்கில இலக்கியங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார். சில நாட்கள் கழித்து என் தகப்பனாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார் ‘கல்கி’. ‘விகடனை வாரப் பத்திரிகையாய் மாற்றப் போகிறோம். உங்கள் மகனை வேலைக்கு அனுப்ப முடியுமா? “ என்று கேட்டிருந்தார். கதர் பிரசாரத்துக்காக கோவை வந்த கல்கி, என் தகப்பனாரிடம் நேரிலும் இதே கோரிக்கையை வைத்தார். இப்படித்தான் விகடனில் நான் சேர்ந்தேன். கல்கி, துமிலன், தேவனுடன் நான்காவது நபராக நான். அதற்கு அடுத்தவாரம் சேர்ந்தவர்தான் ‘றாலி’ ”
[ வாசன், கல்கி ]

” விகடனைத் தவிர ‘ஆனந்த வாஹினி’ என்ற தெலுங்கு மாதப் பத்திரிகையையும், ‘தி மெர்ரி மாகஸின்’ என்ற உயர்தர மாதமிருமுறை பத்திரிகையையும் வாசன் தொடங்கியதற்குக் காரணம், பத்திரிகைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். வாசனின் நண்பரும் வக்கீலுமான எஸ்.சிங்கம் ஐயங்கார்தான் ‘தி மெர்ரி மாகஸி’னைக் கவனித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அளவில்லாத பாண்டித்யம் பெற்றவர் அவர். அலுவலகத்தில் யாரும் பீடி, சிகரெட் பிடித்துவிட முடியாது. ஆனால், பெரிய சைஸ் சுருட்டை சிங்கம் ஐயங்கார் பிடிப்பார். அந்தளவுக்கு அவருக்கு உரிமை கிடைத்ததற்குக் காரணம், அவர் புலமையினால்தான்.”

“வெளிநாடுகளில் பிரபலமான எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் விகடன் அலுவலகத்துக்கு வியாழனன்று வந்துவிடும். அன்று அந்தப் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று கல்கிக்கும் சிங்கம் ஐயங்காருக்கும் போட்டியே நடக்கும். அப்போது நான் விகடன் நூலகராகவும் இருந்ததால் இதைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையது. மொத்தத்தையும் அள்ளிவிட்டுப் போய் ஒரு திருப்பு திருப்பிவிட்டுத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மறுபடி கொண்டு வந்து போட்டு விடுவார் சிங்கம் ஐயங்கார். “

“ தலையில் கொம்பு முளைத்த விகடன் தாத்தாவுக்கு முன், குல்லா போட்ட பபூன் படம்தான் விகடனின் லோகோவாக வரும். இந்த லோகோவை மாற்றவேண்டும் என்று பேச்சு வந்தபோது என்னுடைய மூக்கையும் தாடையையும் பார்த்து அதே மாதிரி வரைந்தார் மாலி. ‘உன்னோட மூக்கும் தாடையும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டும் போல” என்று கிண்டலடிப்பார் மாலி. “

“ மாலியின் பென்ஸில் படங்களில் மாறுதல் செய்தால் நன்றாயிருக்குமே என்று கல்கி சில சமயம் விரும்புவார். ஆனால், அதை நேரில் சொல்லமாட்டார் ! என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா?’ என்று சொல்லி, அவருக்காக ஆசிரியர் சொன்ன மாறுதல் ‘சரி’ என்று படுவதை உடனே ஏற்பார். “


“ ( விகடன் அலுவலகத்தில் ஒரு ஹால் உண்டு.) இந்த ஹாலில், ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தமது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”

“ ஆனந்த விகடனில் முதல் தொடர்கதை எழுதிய பெருமை எஸ்.எஸ்.வாசனையே சாரும். பத்திரிகையைத் தாம் மேற்கொண்டதும், ‘இந்திரகுமாரி’ என்ற தொடர்கதையை எழுதினார் வாசன்.  தமிழ் நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியவரும் அவரே. 1933-இல் நூறு ரூபாய் முதற்பரிசுடன் நடந்த இந்தப் போட்டியில், ‘றாலி’ முதல் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசு பி.எஸ்.ராமையா. மூன்றாவது பரிசு, ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் பெற்றார்.  “

“ விகடன் வாரப் பத்திரிகை ஆனதும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பிரமாதமாக அதிகரித்தது. விகடனில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ராஜாஜி, வ.ரா, மகாகனம் சாஸ்திரிகள், டி.கே.சி., பெ.நா.அப்புஸ்வாமி ஐயர் முதலிய பெரியவர்களும் விகடனில் ஆரம்ப காலத்திலேயே எழுதி அதற்குப் பெருமை கூட்டியிருக்கிறார்கள். ”

” ஆனந்த விகடன் உண்மையில் ஒரு தமிழ் வளர்ப்பு இயக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை “

[ நன்றி ; விகடன் காலப்பெட்டகம் (நூல்) , ‘விகடன்’ பவழ விழா மலர், “தமிழ் இதழ்கள்” ( நூல்: காலச்சுவடு) ; படங்கள் : விகடன் ]

ஒரு பின்னூட்டம்: நண்பர் பேராசிரியர் வே.ச.அனந்தநாராயணன்  எழுதியது :

அண்மையில் நான் சென்னையில் இருந்தபோது, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, சாஸ்திரி நகரில் சரஸ்வதி வெங்கடராமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது

விழாவின் தொடக்கத்தில், சங்கீதகலாநிதி டி.கே. கோவிந்த ராவ் குருகுல மாணவியர் பல பாரதியார் பாடல்களை நல்ல குரலும் இசை ஞானமும் சேரப் பாடினார்கள். இந்நிகழ்ச்சி அமைப்புக்குக் காரணமான திரு. குப்புசாமி அவர்களின் அறிமுகத்துடன்திரு.நரசய்யா அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. முதலில், கவிஞர் கே.ரவி ஆற்றவிருந்த சிறப்புரையை (அவருக்குத் தொண்டைக்கட்டு இருந்ததன் காரணமாக) விவேகானந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின், இளம் வழக்கறிஞர், அ.க. ராஜாராமன், அழகாக உரையாற்றினார். இதனை அடுத்து, முன்னதாக அறிவித்திராத பேச்சாளர்கள் பலர் ரா.அ.ப.-வின் பாரதி இலக்கியத் தொண்டைப் பற்றிய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையான ‘போனஸ்’ ஆக இருந்தது. பேராசிரியர் அவ்வை நடராசன், ரா.அ.ப-வின் மகன் (பெயர் நினைவில்லை), ஓவியர் மதன், திரு.மண்டையம் பார்த்தசாரதி ஆகிய ஒவ்வொருவர் பேச்சையும் கேட்கையில் மறைந்த பாரதி அறிஞரின் எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஆற்றிய அரும்பணியின் முழுப்பரிமாணம் தெரியலாயிற்று. 1917-ல் பிறந்த ரா.அ.ப.-வை விட நான்கே மாதம் இளையவரும் அவருடன் 77 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தவருமான திரு.மண்டையம் பார்த்தசாரதியின் உற்சாகமான, நகைச்சுவை கலந்த பேச்சை நானும் குழுமியிருந்தோரும் மிகவும் ரசித்தோம்.  குழுமி இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிடினும் தமிழ் இலக்கியத்திலும் பாரதியின் படைப்புகளிலும் தேர்ச்சிபெற்ற பலர் வருகை தந்திருந்தனர். நகுபோலியன் பாலு, கே.ரவி, குமரிச்செழியன், கோபால், சுவாமிநாதன் ஆகியோர் அவர்களில் சிலர். ரா.அ.ப.-வின் குடும்பத்தினரும் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர் (இணைப்புப் படங்கள்). 

இந்நிகழ்ச்சி பற்றித் திரு. கோபு எழுதியுள்ள (படங்களுடன் கூடிய ) விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:

அனந்த் 20-3-2014







 
[ ரா.அ.ப. அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பகுதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரா.அ.பத்மநாபன்



3 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான கட்டுரை. விகடனின் ஆரம்ப கால செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

இன்னம்பூரான் சொன்னது…

நானும் உங்களுடன் சேர்ந்து திரு.ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். உமது அருமையான, அரிதான தொகுப்பை என் மடலாடும் குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?
இன்னம்பூரான்

Pas S. Pasupathy சொன்னது…

இன்னம்பூரான் அவர்களே! தாராளமாக!