வியாழன், 19 மே, 2016

பி.எஸ். ராமையா -2

சொந்தக் கதை
பி.எஸ். ராமையா



 கட்டுரைக்கு ஓர் அறிமுகம், பின்புலம்:
'மணிக்கொடி’  பத்திரிகை 33-இல் தொடங்கியது.






38-இல் அதன் ஆசிரியராய் இருந்த ராமையா  அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பின் சில மணிக்கொடி இதழ்களே வந்தன; பத்திரிகையே நின்றுவிட்டது. 1950-இல் கணேசன் என்ற இளைஞர் ‘மணிக்கொடி’யை மீண்டும் தொடங்கினார். ராமையா மீண்டும் பொறுப்பேற்றார். 

பிறகு நாலைந்து இதழ்களே வந்தன. கணேசனுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால், பத்திரிகையை நிறுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி  ராமையா விலகிவிட்டார்.  ( ’முதல் மணிக்கொடி’ யைப் பற்றிய  தகவல்களுக்கு ‘மணிக்கொடிக் காலம்’ என்ற நூலைப் படிக்கவும்.) 

இரண்டாவது தோற்றம் பெற்ற மணிக்கொடியின் முதல்  மூன்று இதழ்களைப் பற்றிச் சுவையாக  இங்கே எழுதுகிறார் ராமையா.( இது மணிக்கொடியில் அவர் எழுதிய கடைசிக் கட்டுரையோ? )
===========

'மணிக்கொடி வெளிவரப் போகிறதென்று அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி யெல்லாம் பிரதி மாதமும் அது என்று வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாறுவதிலேயே தீர்ந்து விடுகிறது' என்று குறை கூறிப் பல அன்பர்கள் கடிதங்கள் எழுதினார்கள். சொந்தமாக அச்சகமும் இதர வசதிகளும் அமைத்துக் கொள்ளாமலே பத்திரிகையைத் தொடங்கி விட்டதால் அவர்கள் அப்படிக் குறை கூற இடம் ஏற்பட்டது.

'பிரதி மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகையைக் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாதா?" என்று ஒரு ஏஜண்டு நண்பர் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்.

வேறு வகைகளில் முயன்று, சாத்தியமாகாது என்று தோன்றியதால், ஒரு இதழையே இடைமறித்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகை வெளிவர ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்தோம். ஆகையால் ஏப்ரல் 1950 என்று முகவரி போட்டுக் கொண்டு வர வேண்டிய இதழ் வரவில்லை. இந்த இதழின் விலாசம் மே, 1950. ஆனாலும் முதல் கொடியில் நான்காவது மணிதான். இனி பிரதி மாதமும் இதழ்கள் முதல் தேதியன்றே வெளி வந்து விடும். இடையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அன்பர்கள் பாராட்ட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

'மணிக்கொடி இலக்கியப் பத்திரிகை. தமிழில் அசலாக எழுதப்படும் கதை இலக்கிய வளர்ச்சிக்கென்றே தோன்றியது. வசன நடையிலேயே கவிதா வேகமும் மேதா விலாசமும் காட்டி எழுதும் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே ஒட்டிய உறவைத் தோற்றுவிப்பது அதன் லட்சியங்களில் ஒன்று.

'மணிக்கொடி'யின் புதிய தோற்றத்தில் சென்ற மூன்று இதழ்களிலேயே இந்த வகையில் அது நல்ல சாதனை கண்டிருக்கிறது.

"ஸ்ரீ தி. ஜானகிராமனின் கதை ஒவ்வொன்றும் வியப்பை யூட்டும் படைப்புகள். அவற்றிலே உள்ளடங்கியிருந்தே படிப்பவர் நெஞ்சையள்ளும் அழகும், ஹாஸ்யமும் அதிசயமானவை. முதல் சில வரிகளுக்குள்ளேயே அவருடைய கதாபாத்திரங்கள் உருவம் பெற்றுக் கண்முன் எழுந்துவிடுகின்றன. அவற்றின் வளர்ச்சியிலே அவர் காட்டும் நகாஸ் வேலைகள் படிப்பவரை அபூர்வமான அனுபவங்களுக்கு உள்ளாக்குகின்றன, என்றும், "ஸ்ரீ எல்லார்வி நம்முடைய கிராமங்களில் சகஜமாக வழங்கும் சொற்களைச் சுலபமாகக் கையாளுகிறார். அவருடைய கதைகளிலும், பாத்திரங்களிலும் காணும் அழகுகளுக்கு அவருடைய நடை ஒரு தனிச் சோபையளிக்கிறது, ' என்றும் ஒரு நண்பர் என்னிடம் நேரில் சொல்ல வந்திருந்தார்.

மூன்றாவது இதழில் வெளியான கதை ஒவ்வொன்றும் ஒரு தனி மணிக்கதை' என்று பலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றிருவர் ஒவ்வொரு கதையையும் அலசி ஆராய்ந்து விமரிசனமே எழுதியிருக்கிறார்கள்.
அந்த இதழில் வந்த 'மாப்பிள்ளை என்ற கதையைப் பற்றிச் சொல்லாத கடிதமே இல்லை. அதை யெழுதிய 'ரஜனி'யின் உண்மைப் பெயர் என்ன என்பதையறிய ஒருவர் தீவிர ஆவல் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீ பி. வி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள "அவள் வாழ்க்கை' என்ற கதையை அபாரமாகப் புகழும் ஒரு அன்பர், "மகரம் எழுதியுள்ள தரை மீன் எங்கள் காரியாலயத்திலும் ஒன்று இருக்கிறது,' என்று எழுதியிருக்கிறார்.
வாசகர்களிடம் தோன்றியுள்ள இந்த உற்சாகம் தமிழில் உயர்தர இலக்கியப் படைப்புகள் பெருக வைக்கும் தூண்டு கோலாக வளர வேண்டும் என்பதே என் ஆசை.

'மணிக்கொடி"யில் கதைகளுடன் சில கட்டுரைகளுக்கும் இட மளிக்கலாம் என்ற கருத்தைப் போன இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்குப் பலமான ஆட்சேபணைக் கடிதங்கள் வந்துள்ளன. ஒரு இலங்கை யன்பர், ''எக்காரணத்தைக் கொண்டும், எல்லாம் கதைகள் என்ற தனிச் சிறப்பை மணிக்கொடி இழந்து விடக் கூடாது' என்கிறார். மதுரையிலிருந்து ஸ்ரீ துரைசாமி நாடார் என்ற அன்பரும் அதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறார். அவ்விருவரும், அதைப் பற்றி எழுதியுள்ள மற்றவர்களும், "இப்போது ஒவ்வொரு இதழிலும் வரும் ஸ்ரீ. கு. ஸ்ரீநிவாஸனின் கட்டுரை யொன்றே போதும்,' என்று சொல்லுகிறார்கள். எனவே 'மணிக்கொடி"யை எல்லாம் கதைப் பத்திரிகையாகவே வைத்து விடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

இந்த இதழில் உள்ள சில கதைகளில் தற்செயலாக ஒரு விசித்திரமான கருத்து ஒற்றுமை அமைந்து விட்டது. "மரணபயம்", 'மனக்குரங்கு', 'நினைப்பதும் நடப்பதும்', 'வெறிஆகிய இந்த நான்கு கதைகளிலும் மரணம் என்ற கருத்து, அதிலிருந்து எழும் பயம் மனித நெஞ்சை எப்படியெல்லாம் ஆட்டி வைத்து, எந்த எல்லை வரை இழுத்துச் சென்று விடுகிறது என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அழகு உருவமாக அமைந்திருக்கிறது.

"மரண பயத்தில் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்தவரின் மனைவி, 'இன்னொரு உயிரை எமனிடம் காட்டிக் கொடுத்துத் தன் கணவன் உயிரை மீட்டுக் கொண்டாள் என்ற கருத்து ஒரு அதிசயமான அழகு.

மீ. ரா. என்ற இளைஞர் - இதுதான் அவருடைய முதல் கதை என்று நினைக்கிறேன் - 'மனக்குரங்கில் அதிசயிக்கத்தக்க லாகவத்துடன் 'மரண பயத்தைக் கதைத்திருக்கிறார் சில வினாடிகளுக்குள் பல வருஷ வேதனையை அனுபவித்து விடும் அவருடைய மனத் தத்துவப் படைப்பு அபாரமாக இருக்கிறது.

 'நினைப்பதும் நடப்பதும்" என்ற  கதையின் ஆசிரியை, நேரிடையாகத் தொடாமல் மறை முகமாக 'மரணம்' என்ற கருத்து எப்படி ஒருத்தியின் மனோ பலத்தையே குடித்து, அவளையும் பலி கொண்டு விட்டது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.

'வெறியில் ரஜனி தேர்ந்த கதாசிரியரின் திறமையைக் காட்டி விட்டார். சாவு தன்னைத் தொட வருகிறது என்ற பயத்தில் பிறந்ததா, அல்லது தன்னை மற்றவர்கள் அலட்சியம் செய்து விட்டார்கள் என்ற ஆத்திரத்திலும் கசப்பிலும் பிறந்ததா மீனாவின் வெறி என்பதைப் படிப்பவர்களே யூகித்துக் கொள்ளும்படி விட்டு விட்டார். மீனாவின் அந்த மனோ நிலையைப் புலி உதாரணத்தில் தொட்டுக் காட்டுவது ஒரு அபூர்வமான அழகுப் படைப்பு.

மற்றொரு மொழி பெயர்ப்புக் கதை முதலில் ஸிந்தி மொழியில் எழுதப்பட்டது. அதன் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பி லிருந்து தமிழாக்கப்பட்டிருக்கிறது. அப்துல் ரஹ்மான் பாயி என்ற பாத்திரம் அபூர்வமான ஒரு சிருஷ்டி.

 ''ஸ்ரீ லா.ச. ராமாமிருதம் அபூர்வமாகத்தான் எழுதுகிறார். ஆனால் ரொம்ப அருமையாக எழுதுகிறார்' என்று என்னிடம் ஒரு பத்திரிகைப் பிரசுரகர்த்தர் அடிக்கடி சொல்லுவதுண்டு. 'கண்ணிலே விழுந்த தூசியை நீ இங்கே நெஞ்சகத்துக்குள் ஊதி விட்டாய்!: என்று கதாநாயகன் சொல்லும் அழகு அருமையானதுதானே அவன் அந்தத் தூசியை வெளியேற்றி மீளும் சம்பவ அமைப்பு அதைவிட அருமையாக இருக்கிறது.

'இதுதான் வாழ்க்கை' என்ற கதை ஒரு சொல் சித்திரம். கணவன் மனைவி இருவர் உள்ளங்களும் பரஸ்பரம் அன்பில் பிணைபட்டு, சர்வ தியாகங்களுக்கும் சித்தமாக இருக்கும் நிலை யிலும், வாழ்க்கை முறையை அறியாமல், அந்த அன்பையெல்லாம் வீணாக்கிப் பாழ்படுத்தும் பரிதாபத்தை நாம் தினசரி எத்தனை குடும்பங்களில் பார்க்கிறோம்!

ஸ்ரீ நாகராஜன் தமது 'மனமும் மருந்தும்' என்ற கதைக்கு, சமீபத்தில் டாக்டர் ராஜன் பேசியதாகப் பத்திரிகையில் வந்த ஒரு வரிதான் தூண்டு கோல் என்கிறார். வியாதியஸ்தரின் மனோ நிலையை ஆராய்ந்து, அங்குள்ள வியாதிக்கு மாற்றுக் கண்டால் உடல் வியாதியைச் சுலபமாகக் குணப்படுத்தி விடலாம் என்ற கருத்தை வைத்துத் திறமையுடன் ஒரு துப்பறியும் கதையையே படைத்து விட்டார்.

மூன்றாவது இதழில் வெளியான படங்களைப் பற்றிப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். 'சாகரின் படங்களே கதைகளுக்கு ஒரு தனியழகைக் கொடுக்கின்றன என்று ஒருவர் சொன்னார். அவருடைய கண் திருஷ்டி தானோ என்னவோ இந்த இதழில் வரும் கதைகளுக்குச் சரியான படங்கள் எழுதி வாங்கிச் சேர்க்கக் கூட அவகாசமில்லாமல் போய் விட்டது!

பிரதி மாதமும் இதழ் முதல் தேதியில் வர ஏற்பாடு செய்து விட்டதே பெரிய சாதனை என்று எனக்குப் படுகிறது. மற்ற அம்சங்களையும் அதே மாதிரிச் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

– 1950

[ நன்றி: மணிக்கொடி இதழ்தொகுப்பு

பி.கு

“ இரண்டாவது முறை தொடங்கியபோது ‘மணிக்கொடி’க்கு முந்திய கௌரவம், மதிப்பு, கனம் எதுவுமே கிட்டவில்லை. அதற்கு வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. ஆனால் புது மணிக்கொடியின் வழியாக எனக்கு லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன் ஆகிய இரண்டு மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது “
                        பி.எஸ்.ராமையா, “மணிக்கொடிக் காலம்”, தீபம், அக்டோபர் 1971.

தொடர்புள்ள பதிவுகள்:

மணிக்கொடி சிற்றிதழ்

மணிக்கொடி: விக்கிப்பீடியா கட்டுரை

பி.எஸ்.ராமையா

கருத்துகள் இல்லை: