செவ்வாய், 11 அக்டோபர், 2016

மாயூரம் வேதநாயகம் பிள்ளை -1

மனத்தைத் திருப்பி அனுப்புங்கள்
நா.பார்த்தசாரதி


அக்டோபர் 11. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த தினம்.
=== 

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று சொன்னால் தமிழர்களுக்கு உடனே 'பிரதாப முதலியார் சரித்திரம்என்ற நாவல் நினைவுக்கு வரும்; அவருடைய நீதிநூற் பாடல்கள் நினைவுக்கு வரும். கருத்துச்செறிவுள்ள கீர்த்தனைகள் நினைவுக்கு வரும். முன்சீப்பாக வேலை பார்த்தவர் அவர். தம்முடைய காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களிடமெல்லாம் நெருங்கிப் பழகியவர். அழகிய உரைநடையும் பாடல்களும் எழுதுகிற திறமை உள்ளவர். பொதுவாகவே பெரிய உத்தியோகங்களிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்கு இலக்கியச் சுவை, கவி ஆர்வம் இவைகளெல்லாம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமற் போய்விடும். வேதநாயகம் பிள்ளை இதற்கு விதிவிலக்காக வாழ்ந்தார். அவர் தமக்கு வேண்டியவர்களுக்குக் கடிதம் எழுதினால்கூட அந்தக் கடிதத்தைக் கவிதைகளாலேயே எழுதுவார். அவருடைய காலத்தில் மாயூரத்துக்கு அருகில் திருவாவடுதுறை மடத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் தவச்செல்வர் குரு மகா சந்நிதானமாக இருந்தார். அந்த நாட்களில் தமிழ் நாட்டில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்கப் பாடுபட்ட மடங்களில் அதுவும் ஒன்று

வேதநாயகம் பிள்ளை கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலே நெருங்கிய பழக்கம் இருந்தது. உரிமைகளும் வசதிகளும் படிப்பறிவும் பெருகியுள்ள இந்த நாளில்தான், சாதி சமயப் பாகுபாடுகளும் குழப்பங்களும் பெருகியுள்ளன. அந்தக் காலத்தில் ஒற்றுமை இருந்ததென்பதற்குக் கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளையும், சைவ மடாதிபதியான சுப்பிரமணிய தேசிகரும் பழகிக்கொண்ட முறையே சான்று. ஒரு சமயம் மாயூரம் பகுதிகளில் பேதி நோய் ஏற்பட்டுப் பல பேர்கள் இறந்து போனார்கள். அந்தச் சமயத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய உதவியைக் கொண்டு வேதநாயகம் பிள்ளை பேதி நோய் பரவியிருந்த ஊர்களுக்கெல்லாம் தாம் ஒருவராக அலைந்து திரிந்து நோய் கண்ட மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தார். 

வேதநாயகம் பிள்ளையிடம் ஒர் அருமையான இரட்டை மாட்டு வில் வண்டி இருந்தது. திருவாவடுதுறைக்கோ, மற்ற இடங்களுக்கோ போக வேண்டு மென்றால் வண்டியைப் பூட்டிக்கொண்டு கிளம்பி விடுவார் வேதநாயகம் பிள்ளை. சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு வருவதற்காக ஒரு தடவை வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்குப் போயிருந்தார். சுப்பிரமணிய தேசிகர் தமிழ் இலக்கிய வல்லுநர். அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது எப்படிப்பட்ட கடுமை உள்ளமுடைய வர்களானாலும் நெகிழ்ந்து போய் அவர் பேச்சில் மனத்தைப் பறிகொடுத்து விடுவார்கள். அவ்வளவு சாமர்த்தியமாகவும் நயமாகவும் பேசுகிறவர் அவர் 

காலையில் ஊரிலிருந்து புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்த வேதநாயகம் பிள்ளை வெகுநேரம் சுப்பிரமணிய தேசிகரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு இராத்திரியே திரும்பி விட்டார். அவர்தான் திரும்பினாரே ஒழிய, அவருடைய மனம் சுப்பிரமணிய தேசிக்ரிடமே தங்கிவிட்டது. நினைவுகளெல்லாம் அவரைப் பார்த்துப் பேசிய இனிய நாழிகைகளிலேயே இருந்தன. ஊருக்குத் திரும்பிய பின்னும் சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்துப் பேசியதை எண்ணியே சதா ஏங்கிக் கொண்டிருந்த வேதநாயகம் பிள்ளை அந்த ஏக்கம் பொறுக்க முடியாமல் தவித்தார். தவிப்பைத் தாங்கிக் கொள்ள இயலாமல் சுப்பிரமணிய தேசிகருக்கே ஒரு கடிதம் எழுதிவிட்டார் அவர். கடிதத்தில் ஒரே ஒரு பாட்டுத்தான் எழுதியிருந்தார்.வேறு ஒன்றும் எழுதவில்லை. அந்த ஒரு பாட்டுத்தான் கடிதம், கடிதம்தான் அந்த ஒரு பாட்டு. ஆனால் தம்முடைய மனத்தைக் கவர்ந்த நல்ல மனிதருக்கு எப்படி நாம் ஒரு கடிதம் எழுத வேண்டுமென்பதற்குச் சரியான முன்மாதிரியாகத் திகழ்கிறது அந்தப் பாட்டு, வேத நாயகம் பிள்ளையின் உள்ளத்து உருக்கமெல்லாம் ஒன்று சேர்ந்து சங்கமமாகி அந்தப் பாட்டில் காட்சியளிப்பதைக் காணலாம்.

சூர்வந்து வணங்கும் மேன்மைச்
  சுப்பிர மணிய தேவே !
நேர்வந்து நின்னைக்கண்டு
  நேற்றுராத் திரியே மீண்டென்
ஊர்வந்து சேர்ந்தேன் என்றன்
  உளம்வந்து சேரக் காணேன்
ஆர்வந்து சொலினுங் கேளேன்
  அதனைஇங்  கனுப்பு வாயே!


ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் என்னுடைய உள்ளம் மட்டும் வராமல் அங்கேயே உங்களிடம் தங்கிவிட்டது. அதை எனக்குத் திருப்பி அனுப்பி வையுங்கள்என்று வேதநாயகம்பிள்ளை எழுதியிருப்பதில்தான் எவ்வளவு குழைவு 

வேதநாயகம் பிள்ளையின் மனோபாவம் பாட்டில் அழகாகப் பதிந்துள்ளது. இந்தப் பாட்டைப் படிப்பவர்கள் பறிகொடுத்த மனம் திரும்பக் கேட்டால் கிடைக்காது

[ நன்றி : தமிழ் இலக்கியக் கதைகள், நா.பார்த்தசாரதி  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வேதநாயகம் பிள்ளை: விக்கிப்பீடியாக் கட்டுரை

நா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை: