வியாழன், 5 அக்டோபர், 2017

864. சோ ராமசாமி -1

மலைப் பங்களா
சோ


அக்டோபர் 5. ‘சோ’ ராமசாமியின் பிறந்த தினம்.

விகடனில் 1970-இல் ‘நவர(!)சக் கதைகள்’ என்ற தொடரில் வந்த ‘மர்மக் கதை’ இதோ!
====


மலையுச்சியில் இருந்த அந்த பங்களாவில் 'மினுக்' 'மினுக்'கென்று ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு 'மினுக்' என்று சத்தம் போடவில்லை. அப்படி எரிந்தது!

இரவு மணி 12. பதினொன்றாகி அதற்குப் பிறகு ஒரு மணி நேரம்!
"தொடேல்...!" பயங்கர சப்தம். நிசப்தம்... நிசப் தம்... சப்தமில்லை. சப்தமில்லாத நிசப்தம்! மூலை யில் உறங்கிக் கிடந்த கரிய உருவம் விருட்டென எழுந்து நின்றது. அகல் விளக்கு 'பொட்'டென அணைந்தது. 'பொட்'!

ஒரு பெண்ணின் குரல், 'கிரீச்' என்று கத்திய சப்தம் அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்தது!

கரிய உருவம் கிடுகிடுவென ஓடி, தாளிட்ட கதவை தாளிட்டிருக்கிறதா என்று பார்த்தது. பின் அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்தது.

மணி 12 அடித்து ஐந்து நிமிடங்கள். ஒரு மணி அடிக்க இன்னும் ஐம்பத்தைந்தே நிமிடங்கள். பயங்கரம்!

பங்களாவிற்கு வெளியே தோட்டம். தோட்டத்திற்கு நடுவே பங்களா! தோட்டமும் பங்களாவும் மலையுச்சி யின் மேல்! மலைக்குக் கீழே... கீழே... மலையடிவாரம்!

'கிரீச்' என அலறிய குரல் கேட்டதே, அந்தப் பெண் யார்? யாரவள்? ஏன் கத்தினாள்? 'வீல்' என்று கத்தாமல் 'கிரீச்' என்று கத்திய மர்மம் என்ன? அவளுக்கும் அந்த கரிய உருவத்திற்கும் என்ன சம்பந்தம்?
கரிய உருவம் கழியை எடுத்துக்கொண்டு, விடு விடென நடந்தது. பங்களா ஹாலைத் தாண்டி வெளியே வந்தது. அதன் நடையிலே ஒரு பரபரப்பு! போர்ட்டிகோவைத் தாண்டி வந்தது. வேகமான நடை இப்போது ஓட்டமாக மாறிவிட்டது! போர்ட்டிகோவைக் கடந்து, தோட்டத்திற்கு வந்தது.
தோட்டத்தில்... செடிகள்! செடிகளில் பூக்கள்! பூக்களின் கீழே காம்புகள்! இலைகளும் இருந்தன! கரிய உருவம் எதையும் கவனிக்காமல் தலைதெறிக்க ஓடியது.

ஏன்? ஏன் ஓடியது? கரிய உருவம் ஏன் ஓடியது?
மறுபடியும் ஒரு சப்தம் | 'கிரீச்..!'
கரிய உருவம் பங்களா இரும்புக் கதவை வந்த டைந்தது. ஆ... இரும்புக் கதவு திறந்தே கிடந்தது!
கரிய உருவம் பதறி நின்றது. வெளியே இருந்த காரிலிருந்து ஒரு கனவான் இறங்கினார்.

"டேய், முனியா! என்னடா இது தூக்கம்! நம்ம கார் பிரேக் போட்டு நிறுத்தினாலே 'கிரீச்'னு அலறுதே! அப்படியுமா எழுந்திருக்கலை? காரை நிறுத்திட்டு கேட்டைத் திறந்தேன். அது வேற 'கிரீச்'சுனு சத்தம் போடுது. சரி சரி, நாளைக்கு எண்ணெய் போட்டு வை! இனிமே இப்படித் தூங்காதே..!"

"நீங்க வர சத்தம் கேட்டுத்தான் ஓடியாந்தேன்... மன்னிச்சுக்குங்க எசமான்!" என்றான் முனியன்.

காரில் ஏறி விர்ரென்று உள்ளே போனார் எசமான். மலைப் பங்களா உள்ளே!

மணி பன்னிரண்டடித்து ஐந்து நிமிடமாகி, ஐம்பத் தொன்பது விநாடிகள்..! எங்கும் நிசப்தம்! பூரண நிசப்தம்!

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சோ ராமசாமி

சோ ராமசாமி : விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: