வியாழன், 9 நவம்பர், 2017

899. இலையுதிர் காலம் : கவிதை

இலையுதிர் காலம் 
பசுபதி 





வேகமான நடைக்குப்பின்
மேல்மூச்சு, கீழ்மூச்சு.
‘மேப்பிள் ‘ மரத்தடிப் பெஞ்சில்
வியர்த்தபடி விழுந்தேன்.
வழக்கமாய் வம்பளக்க வரும்
வயோதிக நண்பர் இன்றும்
வரவில்லை. அவரைப் பார்த்து
வாரம் ஒன்றாச்சே ?
பச்சோந்தி போல் நிறமாறிப்
பழுப்புச் சிவப்புப் படர்ந்த
பச்சையிலை எந்தலை மேல்
‘பாரசூட் ‘ செய்தது.
நண்பரின் நகைப்பு
நினைவில் துளிர்த்தது.
‘பச்சையிலை சிவப்பாவது வெறும்
பருவத்தின் சேட்டை!
சிவப்பு பச்சையாவதோ
சிருஷ்டியில் அபூர்வம்!
சேர்ந்தேன் முதலில்
சிவப்புக் கட்சி !
அஞ்சுவருடமாய்ப் ‘பசுமை
அமைதி ‘க் கட்சி ! ‘
நகைப்பு நிற்கும்.
நரைமுடி சூடேறும்.
‘பரந்த மரத்தடியில்
பச்சையிலையும் விழும்.
பறவை எச்சமும் விழும் !
எந்த எச்சம் தெரியுமா ? ‘
கண்கள் சிவக்கும்.
கைத்தடி ஆடும்.
‘பரிதியை மறைத்துப்
பறக்கும் பேய்ப்பறவை.
காலனை மடியில் கட்டிக்
கனலுமிழும் கழுகு.
பொத்தானை அமுத்தினால்
சைத்தானை எச்சமிடும்
போர்விமானப் பருந்து.
பச்சிளம் சிறாரைச்
சிவப்புச் சேற்றில்
புதைக்கும் எச்சம். ‘
நண்பரின் வீட்டுப் பக்கம்
நடையைக் கட்டினேன்.
கதவைத் திறந்த பெண்மணியின்
கனத்த முகம் பொட்டில் அறைந்தது.
இலையுதிர் காலம்.
பழமுதிர்க்கும் காலன்.
பசுமைப் பழம்
அமைதி அடைந்துவிட்டது.
‘காரணமதாக வந்து புவிமீதே
காலன் அணுகா திசைந்து
கதி காண…. ‘
பழமுதிர் சோலை. ஆறாம்
படைவீட்டுத் திருப்புகழ்.
பாடியே நாடினேன்
வீடு.
*********
பசுமை அமைதி = Green Peace
[  ' திண்ணை’ மின்னிதழில் நவம்பர் 2001 -இல் வெளியானது ]

தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை: