வியாழன், 15 மார்ச், 2018

1011. காந்தி - 17

10. கெயிரா சத்தியாக்கிரஹம்
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி -2) என்ற நூலின்  10-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் தறுவாயில் இருந்தபோது ஆமதாபாத் தொழிலாளர் சம்பந்தமாக வந்த கடிதத்தைப் போலவே கெயிரா ஜில்லாவிலிருந்தும் ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியா, ஸ்ரீ சங்கர்லால் பாரிக் ஆகியவர்கள் அக்கடிதம் எழுதியிருந்தார்கள். விளைவு குறைந்துவிட்டதால் வரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த குடியானவர்களுக்கு மகாத்மா வந்து வழி காட்டவேண்டும் என்று எழுதி யிருந்தார்கள். எனவே ஆமதாபாத் தொழிலாளர் பிரச்னை ஒருவாறு முடிந்ததும் காந்திஜி கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதி யாத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
.
காந்திஜிக்கு முன்னாலேயே ஸ்ரீ அமிருதலா தர்க்கா (தக்கர் பாபா) கெயிராவுக்குப் போய் அங்குள்ளா நிலைமையைத் தெரிந்துகொண்டிருந்தார். ஏறக்குறைய பஞ்சம் என்று சொல்லக்கூடிய நிலைமை மேற்படி ஜில்லாவில் ஏற்பட்டிருந்தது. ஒரு ரூபாய்க்கு நாலணா வீதமோ அதற்குக் குறைவாகவோ மகசூல் கண்டிருந்தால் அந்த வருஷத்தில் வரி வசூலைத் தள்ளி வைப்பதற்கு, சர்க்கார் நிலவரிச்சட்டங்கள் இடங்கொடுத்தன. நாலு அணா விகிதத்துக்குக் குறைவாகவே மகசூல் கண்டிருப்பதாக விவசாயிகள் சொன்னார்கள். சர்க்கார் அதிகாரிகளோ நாலு அணா விகிதத்துக்கு மேல் மகசூல் கண்டிருக்கிறதென்று சாதித்தார்கள். நடுநிலைமையும் ஆராய்ந்த தக்கர் பாபா போன்றவர்கள் குடியானவர்களின் கட்சி தான் உண்மையானது என்று கூறினார்கள். ஸ்ரீ தக்கர் பாபா இது குறித்துக் கமிஷனர் துரையுடன் கலந்து பேசி யிருந்தார். ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸர் கோகுல் தாஸ் பாரெக் ஆகியவர்கள் பம்பாய்ச் சட்டசபையில் இந்தப் பிரச்னையைக் கிளப்பி யிருந்தார்கள். அதனால் பயன் ஒன்றும் விளையவில்லை. குடியானவர்களின் கோரிக்கையோ மிகவும் மிதமானது. வரி வசூலை ஒரு வருஷத்துக்குத் தள்ளிப் போடும்படிதான் அவர்கள் கேட்டார்கள். இதைச் சர்க்கார் நேரடியாக ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், மூன்றாவது மனிதர்களின் மத்தியஸ்தத்துக்கு விட்டுவிடும்படி சொன்னார்கள். இதற்கும் அதிகாரிகள் இணங்கவில்லை. வரியை வசூலித்தே தீர்வது என்று ஒரே மூர்த்தன்யமாயிருந்தார்கள்.

காந்திஜி எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, "வேறு வழியில்லை. குடியானவர்கள் வரி கொடுக்க மறுத்து சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியது தான்!" என்ற முடிவுக்கு வந்தார். அவ்வாறே கெயிரா ஜில்லா விவசாயிகளுக்கு மகாத்மா யோசனை கூறியதுடன் வரு கொடா இயக்கத்தைத் தாமே தலைமை வகித்து நடத்தவும் ஒப்புக் கொண்டார்.

கெயிரா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை புரிவதற்காக ஸ்ரீ வல்லபாய் படேல் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ இந்துலால் யாக்னிக், ஸ்ரீ மகாதேவ தேசாய், ஸ்ரீ அனுசூயாபாய் முதலியோர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் அனைவரும் பின்னர் காந்தி மகானையே பரம குருவாகக் கொண்டு தேசத் தொண்டு ஆற்றுவதற்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டார்கள். கெயிரா சத்தியாக்கிரஹத்தின்போதே ஸ்ரீ வல்லபாய் படேல் ஏராளமான வருமானம் அளித்து வந்த தமது வக்கீல் தொழிலை நிறுத்தவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு தேசத் தொண்டுக்கே நேரம் சரியாயிருந்தபடியால் ஸ்ரீ வல்லபாய் வக்கீல் தொழில் செய்யவே முடிய வில்லை.

கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதியாத் நகரத்தில் இருந்த அநாதாசிரமத்தில் மகாத்மாவும் அவருடைய துணைவர்களும் தங்கினார்கள். வரி கொடாமை இயக்கத்தைச் சேரும் விவசாயிகளிடம் கையெழுத்து வாங்குவதற்கென்று பின்வரும் உறுதிமொழி தயாரிக்கப்பட்டது:-

"எங்கள் கிராமங்களில் மகசூல் இவ்வருடம் நாலணா மதிப்புக்குக் குறைவானதென்று நன்கறிந்த நாங்கள் அடுத்த வருஷம் வரையில் நிலவரி வசூலை நிறுத்தி வைக்கவேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அரசாங்கம் எங்கள் பிரார்த்தனைக்கு இணங்கவில்லை. ஆகையால் இவ்வருஷத்து நிலவரி முழுதையுமோ அல்லது பாக்கியுள்ள பகுதியையோ நாங்களாகச் செலுத்துவதில்லையென்று சத்தியம் செய்கிறோம். அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகள் என்ன நடத்தினாலும் பொறுத்திருந்து வரிகொடாமையின் பயன்களை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். எங்களுடைய நிலங்களே பறிமுதல் செய்யப்பட்டாலும் சகித்துக்கொண்டிருப் போமேயல்லாமல் நாங்களாக வலியத் தீர்வை செலுத்த மாட்டோம். ஆனால் ஜில்லா முழுவதும் இரண்டாவது தவணை வரி வசூலிப்பதை நிறுத்திவிட அரசாங்கத்தார் இணங்கினால் எங்களில் பணங்கொடுக்கக்கூடியவர்கள் வரி முழுமையுமோ பாக்கியுள்ள பகுதியையோ கொடுத்துவிடுவோம். வரி கொடுக்கக்கூடிய நிலையிலுள்ளவர்களும் கொடாமலிருப்பதற்குத் காரணமென்னவென்றால், அவர்கள் கொடுத்துவிடின் ஏழை மிராசுதார்களும் பீதியடைந்து தங்களுடைய உடைமைகளை விற்கவும் கடன் வாங்கவும் ஆரம்பித்து அதனால் தங்களுக்குச் சொல்லமுடியாத துன்பங்களை வருவித்துக்கொள்வார்கள் என்பதுதான். இந்நிலைமையில் ஏழைகளின் நன்மையை உத்தேசித்துப் பணம் செலுத்த சக்தியுடையவர்களும் செலுத்தாமலிருத்தல் கடமையாகுமென்று கருதுகிறோம்."

பிறகு காந்திஜியும் அவருடைய துணைவர்களும் கிராமம் கிராமமாகச் சென்று சத்தியாக்கிரஹ தத்துவத்தை விளக்கிச் சொல்லி மேற்படி உறுதி மொழியில் கையெழுத்து வாங்கத்தொடங்கினார்கள்.

வரிகொடாமை இயக்கத்தின் ஆரம்பத்தில் சர்க்கார் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. இயக்கத்துக்கு அதிக செல்வாக்கு ஏற்படாது என்றும், கொஞ்சம் பயமுறுத்தினால் விவசாயிகள் வரி செலுத்தி விடுவார்கள் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. ஜில்லா முழுதும் விவசாயிகள் ஒரே உறுதியாக வரிகொடாமல் இருந்து வந்தார்கள். பிறகு அரசாங்கத்தின் அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கையில் அகப்பட்ட ஜங்கம சொத்துக்களை யெல்லாம் அதிகாரிகள் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள். ஆடுமாடுகளை ஜப்தி செய்து ஏலம் போட்டார்கள். வரிகொடாதவர்கள் எல்லாருக்கும் அபராத அறிக்கைகள் அனுப்பப்பட்டன. கடைசியில் மகசூலையும் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள்.

இதனால் விவசாயிகளின் உறுதி குலையத் தொடங்கியது. வயலில் விளைந்திருப்பது நாலில் ஒரு பங்கு மகசூல். அதையும் அதிகாரிகள் ஜப்தி செய்துகொண்டு போய்விட்டால், வருஷம் முழுவதும் சாப்பிடுவது எப்படி? அடுத்த பஸலி சாகுபடிக்கு விதைக்கு எங்கே போவது? மாடுகளை அதிகாரிகள் கொண்டு போய் ஏலம் போட்டு விற்று விட்டால், வயல்களை எவ்வாறு உழுவது?

விவசாயிகளில் சிலர் உறுதி தளர்ந்து வரி கொடுக்கத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் ஜங்கம சொத்துக்களில் அவசியமில்லாத பொருள்களை வீட்டு வாசலில் கொண்டுவந்து வைத்தார்கள். அச்சாமான்களை வீணாக்காமல் கொண்டுபோய் ஏலம் போடட்டும் என்பது அவர்கள் கருத்து. ஆனால் ஒரு பகுதியார் தாங்கள் அடியோடு அழிந்து போனாலும் வரி கொடுப்பதில்லை என்று உறுதியோடிருந்தார்கள்.

உறுதி குலைந்து வந்த விவசாயிகளுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு மகாத்மா வழி தேடிக்கொண்டிருந்தார். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. ஒரு வயலில் இருந்த வெங்காய மகசூலை அதிகாரிகள் தவறாக ஜப்தி செய்ய உத்தரவு போட்டிருந்தார்கள். மகசூலை ஜப்தி செய்வதே கொடுமையான காரியம் என்பது மகாத்மாவின் கருத்து. அதிலும் குறிப்பிட்ட இந்த வயலில் ஜப்தி உத்தரவே காரணமின்றிப் போடப்பட்டிருந்தது. ஆகையால் ஜப்தி உத்தரவைப் புறக்கணித்து வெங்காயத்தை அப்புறப்படுத்தும்படி மகாத்மா யோசனை சொன்னார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையில் சில தொண்டர்கள் அவ்விதமே செய்தார்கள். உடனே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணை தினத்தன்று கோர்ட்டில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடிவிட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கும் அவருடைய தோழர்களுக்கும் சொற்பகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கு 'வெங்காயத்திருடன்' என்ற சிறப்புப்பட்டம் பொதுஜனங்களால் அளிக்கப்பட்டது. 'வெங்காயத் திருடனுக்கு ஜே!' என்ற கோஷம் வானத்தை அளாவியது.

இந்தச் சம்பவத்தினால் ஜனங்களின் உற்சாகம் புத்துயிர் பெற்றது. ஆனால் அதிக காலம் அது நீடித்திருக்கவில்லை. கஷ்டப்பட்டுத் தேடிய உடைமைகள் பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க ஜனங்களால் முடியவில்லை. பெரும்பாலோர் களைத்துப் போனார்கள். உறுதியாக நின்ற ஒரு சிலரை மட்டும் அடியோடு அழிந்துபோகும்படி விட்டுவிடுவதா என்ற கவலை காந்திஜியின் மனதில் தோன்றியது. இவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்யவேண்டியதாயிருக்கும் சத்தியாக்கிரஹப்போருக்கு மக்களை முன்னதாகவே தக்கபடி தயார் செய்யவில்லை என்ற எண்ணமும் உண்டாயிற்று.

நிலையில் நதியாத் தாலுகா தாசில்தார், "பணக்காரர்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைக் குடியானவர்களிடம் வரி வசூலிப்பது நிறுத்திவைக்கப்படும்!" என்று மகாத்மாவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். தாசில்தார் அவருடைய தாலுகாவுக்கு மற்றும் பொறுப்பானவர். ஜில்லா முழுவதிலும் நடக்கும் இயக்கத்தை ஒரு தாலுகாவில் மட்டும் எப்படி நிறுத்தமுடியும்?

ஆகையால் காந்திஜி கெயிரா ஜில்லா கலெக்டருக்குக் கடிதம் எழுதி, நதியாத் தாலூகா தாசில்தார் சொன்னது கெயிரா ஜில்லா முழுவதற்கும் பொருந்துமா என்று கேட்டிருந்தார். ஜில்லா கலெக்டர் எழுதிய பதிலில் அது ஜில்லா முழுவதற்கும் பொருந்தும் விஷயம் என்றும், 'பணக்காரர்கள் வரி செலுத்திவிட்டால் ஏழைகளிடம் வரி வசூலை நிறுத்தி வைக்கும்படி' ஏற்கனவே தாம் உத்தரவு போட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை அறிந்ததும் ஜனங்கள் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தத்தொடங்கினார்கள். அவர்கள் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் அவர்கள் கேட்டிருந்ததும் இதுதான் அல்லவா? ஆகையால் தங்களுடைய இயக்கம் பூரணவெற்றி அடைந்துவிட்டதாக அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

ஆனால் காந்திமகானுக்கு இந்தக் கெயிரா போராட்டத்தின் முடிவு அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. சத்தியாக்கிரஹ இயக்கத்தின் முடிவில் எதிரிகளுடைய மனம் மாறியிருக்க வேண்டும் என்றும் சமரசமான பேச்சு வார்த்தையுடன் முடிய வேண்டும் என்றும் காந்திஜி கருதினார். ஆனால் இந்த இயக்கத்தினால் அதிகாரிகளுடைய மனம் கொஞ்சங்கூட மாறியதாகத் தெரியவில்லை. ஜனங்களும் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தத்துவத்தை நன்கு உணர்ந்துகொண்டதாகத் தோன்றவில்லை. ஆகையால் கெயிரா சத்தியாக்கிரஹம் பூரண வெற்றி அளித்ததாக மகாத்மா காந்தி கருதவில்லை.

ஆயினும் அந்த இயக்கத்தின் பின்னைய பலன்கள் மகத்தானவையா யிருந்தன. அதன் பயனாகவே குஜராத் மாகாணத்து மக்கள் விழிப்பு அடைந்து எழுந்தனர். காந்தி மகாத்மாவின் பெருமையை உணர்ந்து அவரைத் தங்கள் மாபெருந்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: